முன் பக்கம் கவிதைகள் சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Tuesday, September 8, 2009

ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது



பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000 இல் The International History Review இதழில் பாய்ல் எழுதிய Foundation of World Order : The Legalist Approach to International Relations (1898-1922) எனும் கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.


உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனலின்' உயர்மட்டக் குழு இயக்குநராக பாய்ல் பணியாற்றியுள்ளார். பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கும், பாலஸ்தீனத்தின் தற்காலிக அரசுக்கும் இவர் ஆலோசகராக இருக்கிறார். பாஸ்னியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம் இன அழிப்புக்குக் காரணமான மிலோசெவிச்சுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் வாதாடி, பாஸ்னிய மக்களுக்கு நீதி கிடைக்க காரணமாக இருந்தவர். "உயிரியியல் ஆயுதங்கள் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் 1989'–அய் அமெரிக்க அரசுக்காக தயாரித்து கொடுத்தவர். இச்சட்டம் ஜார்ஜ் புஷ் அரசால் அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டவடிவம் பெற்றுள்ளது.


இலங்கையில் நடைபெறுவது உள்நாட்டுப் போரல்ல; திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை ஆதாரப்பூர்வமாக உலக அரங்கில் இடையறாமல் வலியுறுத்தி வரும் பிரான்சிஸ் பாய்ல், "தமிழ்நெட்' இணையத்தில் இது தொடர்பாக விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். தற்பொழுது "நாடு கடந்த தமிழீழ அரசின்' ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பாய்ல், "தலித் முரசு'க்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள சிறப்புப் பேட்டியிலிருந்து...

பேட்டி : மாணிக்கம்

தற்பொழுது மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கை அரசின் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கும்போது, அய்க்கிய நாடுகள் அவை போன்ற பன்னாட்டு உரிமை அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக அவை தலையிட வேண்டும். 1948 இன் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் படியும், 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின் படியும், இப்பிரச்சனையில் தலையிடுவதற்கு அய்க்கிய நாடுகள் அவை கடமைப் பட்டுள்ளது. ஏற்கனவே பல நேரங்களில், அய்.நா.வும், உலக நாடுகளும் தலையிட்டு முகாம்களில் இருக்கின்ற மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை பற்றி தொடர்ச்சியாக பேசி யும், எழுதியும் வந்திருக்கிறேன். இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதை முகாம்களைப் போன்ற மரண முகாம்களாக இருக்கின்றன!

"
இலங்கையில் போர் முடிந்துவிட்டது'' என்று இலங்கை ராணுவம் தன்னிச்சையாக அறிவித்த பின்பும் உலக சமூகமும், ஊடகமும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கு இருப்பவை "மரண முகாம்கள்' என்று நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கை ஒரு பாலஸ்தீனமாகவோ, மேற்கு அய்ரோப்பிய நாடாகவோ இருந்திருந்தால், உலக ஊடகங்கள் இவ்வாறு அமைதி காத்திருக்குமா?

பாலஸ்தீனத்தின் மீதும் பாஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக, அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இனவெறி என்றே நான் கூறுவேன். தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டுகொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் பாஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர்-சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், இலங்கைத் தமிழர்கள் பற்றி அவை கூறாததற்கு இனவெறியே காரணம். தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.

இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டபோது, உலக ஒழுங்கு வேறு மாதிரியாக இருந்தது. வெகுசில வல்லரசுகள் மட்டுமே இருந்தன. அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப உலகம் இயங்கியது. இன்று பல வல்லரசுகள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆசியாவில் குறிப்பாக, இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ளன. இப்போதைய சூழ்நிலைகளில் இஸ்ரேல் போன்றதொரு தீர்வு தமிழ் மக்களுக்கு சாத்தியமா?

மிகச் சரியாகக் கூற முடியவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இரட்டைக் கோபுர தாக்குதலான செப்டம்பர் 11க்குப் பிறகு புஷ் நிர்வாகத்தின் கீழ் அனைத்துமே மாறிவிட்டன. அண்மையில் நடைபெற்ற சோக நிகழ்வாக, இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் கூறியுள்ளார். இது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 30 ஆயிரம் தமிழர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அவர்கள் செயல்படப் போகிறார்கள். சீனா இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் இலங்கையுடன் நட்பு பாராட்டுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழர்கள் கிளர்ந்தெழுந்து, இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த இனப்படுகொலையின் போது நிகழாத அது இப்போது முதல் நிகழ வேண்டும்.

இந்திய அரசு தன் நிலையை மாற்றி ஏதேனும் செய்ய முயன்றால், அமெரிக்கா அதற்கும் மேலாக செய்யும். சீனாவுடன் இலங்கை நெருக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்திய அரசின் சிந்தனையில் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தால், அமெரிக்காவும் ஏதேனும் செய்ய முயலும். இந்திய அரசு ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது படுபயங்கரமானது. நாஜி படைகளால் யூதர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் போல, இலங்கைத் தமிழ் மக்கள் அனுபவிக்கிறார்கள். உலகமே கண்களை மூடிக் கொண்டு விட்டது. நாம் இந்தப் பேட்டியை தொடங்கிய நேரம் முதல் இந்த 10 நிமிடங்களில் 10 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய நிலைகளைப் பார்க்கும்போது, இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் இலங் கைத் தமிழர் பிரச்சனையை கை கழுவி விட்டது போன்றே தோன்றுகிறது.

இலங்கை இனப்படுகொலையின் இறுதிக் கட்ட கள நிகழ்வுகள் பற்றி அறிய, உலகமே இலங்கை ராணுவத்தின் பிடியில் இருந்த மருத்துவர்களைத்தான் நம்பி இருந்தது. கடைசியில் ஊடகங்கள் முன் கொண்டு வரப்பட்ட மருத்துவர்களும், இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்தையே தங்கள் செய்தியாக சொன்னார்கள். இந்நிலையில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கிறதா?

அது உங்களிடம், என்னிடம், செய்தி ஊடகங்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் ஆறரை கோடி தமிழ் மக்களின் கைகளில்தான் உள்ளது. உண்மைகளை வெளிக் கொண்டு வருவது நம்மைச் சார்ந்து இருக்கிறது. போரின் இறுதிக்கட்ட காலத்தில், உண்மையிலேயே சில நல்ல ஆதõரங்கள் இருந்தன. இப்போது பொய்களின் மூலமும், ஏமாற்றி மூடி மறைப்பதன் மூலமுமே-விமர்சகர்கள் அனைவரும் இலங்கை அரசால் அடக்கப்பட்டு விட்டார்கள். இதே போன்றதொரு நிலைதான் யூதர்கள் அழிக்கப்பட்ட காலத்திலும் இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு நாஜிகளின் கொடுமைகள் தெரிந்த போதும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இப்போதும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று அமெரிக்காவுக்குத் துல்லியமாகத் தெரியும். எனினும் மவுன சாட்சியாக உலகம் இருப்பதால், தமிழினப் படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

போரில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி இலங்கையை பாராட்ட விழுந்தடித்து ஓடி வந்த நாடுகள், இப்போது "போர் முடிந்து' மூன்று மாதங்களாகியும் இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் குறித்து எதுவுமே பேசவில்லையே?

அவற்றிற்கு தமிழ் மக்கள் குறித்த எந்த அக்கறையும் இல்லை. அதனால்தான் பிப்ரவரி-மே மாதங்களுக்கு இடையில் ராஜபக்சேவினால் நிகழ்த்தப்பட்ட 50 ஆயிரம் தமிழர் படுகொலையை எதிர்த்து எதுவும் பேசவில்லை. படுகொலையை நிறுத்தக் கோரி துரும்பைக்கூட அசைக்கவில்லை. இப்போது பன்னாட்டு நிதியத்தின் (M) கடனும் இலங்கைக்கு கிடைக்கப் போகிறது. இது குறைந்த பட்சம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ஒப்புதல் இன்றி சாத்தியமே இல்லை. அவர்கள்தான் அதை கட்டுப்படுத்துகிறார்கள். வல்லரசுகளைப் பொருத்தவரை, 50 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. இது, இனவெறியன்றி வேறு எதுவும் இல்லை. 1930களிலும் இரண்டாம் உலகம் போர் காலத்திலும் யூதர்கள் மீதான எண்ணமும் இதுபோலத்தான் இருந்தது. போர் முடிந்த பிறகுதான் யூத இனப்படுகொலை பற்றி உலகம் உணரத் தொடங்கியது. ஆனால் அவை மிகவும் தாமதமாக நிகழ்ந்ததால் எல்லாம் பயனற்றுப் போனது.

உலக நாடுகளுக்கு அக்கறை இல்லை என்றால், இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கவும் அவசியமில்லையே?

நான் சொல்வது, அவர்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை. இலங்கையின் பூகோள நலன்களை தங்களுக்கு சாதகமாக்க அக்கறை உண்டு. தங்களின் வர்த்தக நலன்களுக்கு இலங்கையின் துறைமுகங்களை யும் நிலப்பரப்புகளையும் மற்றும் தென்னிந்தியத் துறைமுகங்களையும் பயன்படுத்திக் கொள்வதில் அக்கறை உண்டு.

இலங்கைத் தமிழர்கள் பலம் கொண்டிருந்த போதும், தங்களுக்கென்று வலிமையான பிரதிநிதிகள் இருந்த போதும்-அவர்களின் நியாயமான நல்வாழ்வை உறுதிப்படுத்தாத இலங்கை அரசு, இப்போது அவர்கள் வலுவிழந்து, மேய்ப்பன் இல்லாதது போன்ற நிலையில் பரிதவிக்கும்போது-அவர்களின் உரிமைகளையும், விருப்பங்களையும் அரசு நிறைவேற்றுமா?

நிச்சயமாக நிறைவேற்றாது. உண்மையில் அவர்களை முற்றிலுமாக அழித் தொழிக்கும் வேலையிலேயே அது ஈடுபட்டுள்ளது. போர் வெற்றி மனநிலையில் இருக்கும் அவர்கள், இப்போதும் முகாம்களிலேயே தமிழர்களை வைத்திருக்கிறார்கள். உண்மையில் 300 தமிழர்களுக்கு 1,400 சிங்கள போலிஸ் என்ற விகிதத்தில் நிலைமை இருக்கிறது. இது, இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கும் எதிரானது. திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு குழுவை அழிக்க நினைப்பதும், இன்று இலங்கையில் நாம் பார்ப்பதும் தமிழ் இன அழிப்பே. அதை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

வல்லரசு நாடான அமெரிக்கா, இலங்கையின் இறுதிக்கட்ட இன அழிப்புப் போரின் போது எடுக்கப்பட்ட (மிக முக்கிய ஆதாரமான) செயற்கைக் கோள் படங்களை வெளியிட மறுப்பது ஏன்?

செயற்கைக் கோள் படங்களை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்காவுக்குத் தெரியும். இலங்கையின் கனரக ஆயுதங்கள், பீரங்கி மற்றும் விமானங்கள் தமிழர்களைத் துண்டாடியதை உலகமே பார்த்தது. பாஸ்னியா போரிலும் அமெரிக்கா இவ்விதமாகவே நடந்து கொண்டது. அமெரிக்க செயற்கைக் கோள்கள் எப்போதும் பாஸ்னியாவை சுற்றியே இருந்தன. பாஸ்னியாவில் என்ன நடந்தது என்பது அவற்றில் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். ஆனாலும் அவை வெளியிடப்படவில்லை. அமெரிக்கா வெளியிடாது. ஏனென்றால், மக்கள் கோபமுற்று அதனிலும் பெரிதாக ஏதேனும் செய்து அமைதிக்கு வழிவகுக்க நிர்பந்திப்பார்கள் என்பதால்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்கா எதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளதா?

என்னைப் பொருத்தவரை, அமெரிக்கா ராஜபக்சேவையே ஆதரிக்கும். அண்மையில் பன்னாட்டு நிதியத்தின் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளதே அதற்கு சான்று. அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துடன் அமெரிக்கா பேசி வந்தது. அமைதிப் பேச்சு வார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை. அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டியது, இலங்கையில் நடப்பது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதைத்தான். இப்போது அமெரிக்கா இனப்படுகொலையை அங்கீகரிக்க மறுப்பதன் காரணம் இதுதான் : அப்படி அங்கீகரித்தால் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் முதலாம் சட்டப்பிரிவின்படி-இனப்படுகொலையைத் தடுக்கவும், நிறுத்தவும் அது கடமைப்பட்டதாகி விடும். அதை செய்ய அமெரிக்காவுக்கு விருப்பமில்லை. இதுதான் பாஸ்னியாவிலும் நிகழ்ந்தது. ஒரே ஆறுதல் (வேறுபாடு) பாஸ்னியா மீது உலக ஊடகங்கள் பார்வையை செலுத்தின.

புலம் பெயர்ந்த தமிழர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசை' நிறுவுவது பற்றி சிந்திக்கிறார்கள். நாளை உள் நாட்டிலோ, வெளிநாட்டிலோ "தமிழீழம்' என்றொரு நாடு பிரகடனப்படுத்தப்பட்டால், அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

நான் ஏற்கனவே சொன்னபடி, அமெரிக்கா அது குறித்து எந்த அக்கறையும் காட்டாது. குறிப்புகளின்படி, ராஜபக்சே ஒரு தலைப்பட்சமாக முறித்த அமைதி ஒப்பந்தம் நடப்பில் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா திரைக்குப் பின்னால் தொடர்பு கொண்டிருந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான பார்வை மாற்றப்பட்டபோது, அமெரிக்கா ராஜபக்சே அரசாங்கத்தை ஆதரிக்கத் தொடங்கியது.

அரை நூற்றாண்டிற்கும் மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க முடியும்?

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியல் தீர்வுகள் இவ்வாறாக இருக்கலாம் : 1. தங்களுக்கென்று சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தனி நாட்டை உருவாக்கிக் கொள்வது 2. ஒரு சுதந்திர நாட்டுடன் இணைந்து செயல்படுவது 3. மக்களால் தீர்மானிக்கப்படும் வேறு அரசியல் நிலைப்பாடுகள். இவற்றில் எதுவாக இருந்தாலும், அது இலங்கைத் தமிழர்களாலேயே தேர்வு செய்யப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமோ, நானோ அல்லது இந்தியாவில் வாழும் தமிழர்களோகூட எந்தத் தீர்வையும் சொல்ல முடியாது. பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிடாததற்கு சொல்லும் காரணம், இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை, தான் அங்கீகரித்தால், இந்தியாவில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதைப் போல் தனி நாடு கேட்டுப் போராடுவார்கள் என்பதே. இது, பன்னாட்டுச் சட்டங்களின்படி ஒரு பொய்யான இரட்டை கூறு நிலை. எனவே இவ்வாறான காரணத்தைச் சொல்லி, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறுவது இந்தியாவுக்கு இழுக்கு.

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு "மக்கள் குழு'வினர். எனவே, சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின்படி (International Covenant on Civil and Political Rights), இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெறத் தகுதியானவர்கள் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கென்று தனியாக ஒரு மொழி, இனம் மற்றும் மதத்தைக் கொண்டிருக்கும் மக்கள். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கை அரசு தமிழ் இன அழிப்பில் ஈடுபடுகிறது.

இன்னும் தெளிவாக சொல்கிறேன். இலங்கையும் கையெழுத்திட்டுள்ள சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பன்னாட்டு சட்டங்களின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த உரிமை யின்படி, அவர்கள் சுதந்திரமாக தங்கள் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

Wednesday, September 2, 2009

உணவுப் பொருள் - வரலாறு காணாத விலை உயர்வு!

இந்தியாவின் பல மாநிலங்களில் வறட்சியின் கோர தாண்டவம் ஆரம்பித்துவிட்டது. வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் அரிசி, பருப்பு விலைகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டன.

இப்போது தென் மாநிலங்களிலும் தன் கோரமுகத்தை நீட்டியுள்ளது வறட்சி. முக்கியமாக ஆந்திரத்தில் உச்சகட்டம் என்றே சொல்லலாம். கடந்த ஒரு வாரத்தில் இங்கு ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.


ஆந்திரா முழுவதும் நல்ல சாப்பாட்டு அரிசியின் கிலோ ரூ.50க்கும் மேல். சர்க்கரை விலையைக் கேட்டால் வாழ்க்கையே கசந்து விடும். கிலோ ரூ.38 வரை உயர்த்தப்பட்டுள்ளதாம். துவரம் பருப்பு ரூ.130 வரை விற்கப்படுகிறது.


தமிழகம் மட்டும் விதிவிலக்காகிவிடுமா... இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சர்க்கரை விலை கிலோ 33 முதல் 35 வரை இஷ்டத்துக்கும் விலை வைத்து விற்கிறார்கள் (கிராமப்புற ரேஷன் கடைகளில் ரூ.13 மட்டும்தான், ஆனால் அதைப் பெற மைல் நீள க்யூவில் நிற்கவேண்டும்!).


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 சதவிகித விலை உயர்வு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு அத்தியாவசிய பொருளுக்கும் என்கிறது நேற்று வெளியான ஒரு விலை ஆய்வு முடிவு.


வருகிற நாட்கள் மிகக் கொடுமையாக இருக்கும் என்றும் சர்க்கரை விலை ரூ.50-ஐ எட்டிவிடும் என்றும், துவரம்பருப்பு ரூ.200 வரை கூட போகலாம் என்றும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


காரணம், 'அரசு சொல்வதைப் போல வர்த்தகர்களுக்கு அத்தியாவசிய பொருள் கொள்முதல் என்பது தாராளமாக இல்லை. இதனால் நாங்கள் மிகப் பெரும் விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது', என்கிறார்கள்.


இன்னொரு பக்கம் தென் மாநிலங்களில் விளைச்சல் நிலங்கள் நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்துவிட்டன. சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு விவசாயமே இல்லை என்ற நிலை. கிராமப்புறங்களில் நிலத்தின் விலையை ஏற்றிவிட்ட புரோக்கர்கள், விவசாயிகளை உழைக்கும் மனநிலையிலிருந்து கிட்டத்தட்ட விரட்டி விட்டார்கள்.


அரசும் தொழிற்சாலைகளுக்கு பெருமளவு நிலங்களை எடுத்துக் கொடுத்து வருகிறது. முக்கியமாக சின்னச் சின்ன ஏரிகளை அரசே தரைமட்டமாக்கி தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.


ஆக, வரும் நாட்கள் பெரும் சோதனைக் காலமாக அமையும் என்பதே உண்மை. நமக்கு நாமே நல்ல விதமாக நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பதைத்தவிர வேறு வழியில்லை!

Saturday, August 29, 2009

தேசமா? அம்பானிகளா?

1960-ல் குஜராத் மாநிலம் அங்கலேஸ்வர் நகருக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வெண்ணிற ஷெர்வானி முழுவதும் எண்ணெய்க் கறையானது. அந்தக் கறை அவருக்குள் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. பெட்ரோலியப் பொருள்களுக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. அந்தக் கறை படிந்த ஷெர்வானியுடனே நாடாளுமன்றத்தில் பேசப் போவதாக தன்னுடன் வந்தவர்களிடம் கூறினார். இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதில் அந்த அளவுக்கு அவருக்குள் பெருமித உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தில் தோண்டப்பட்ட முதல் பெட்ரோலியக் கிணறுக்கு "வசுந்தரா' என பூமித் தாயின் பெயரை வைத்தார் நேரு.

சொன்னபடியே

, இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை முதன் முதலாக நாடாளுமன்றத்தில்தான் நேரு அறிவித்தார். அதன் பிறகே ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டனர். நாடு முழுவதும் உற்சாகம் பொங்கியது. ஆனால், இன்றைய நிலை வேறு. எல்லாம் மாறிவிட்டது.

ஆந்திரப்

பிரதேச மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய அளவிலான இயற்கை எரிவாயு வளம் கடந்த 2002-ம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தி முதன் முதலாக பிரதமர் மூலமாகவோ, நாடாளுமன்றம் மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை.

ரிலையன்ஸ்

நிறுவனத்தின் பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி அறிவித்த பிறகே இந்த விவரத்தை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தோண்டுமிடமெல்லாம் இயற்கை எரிவாயு கிடைத்தது.

இந்தியாவின்

மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்புக்கு அவர்கள் வைத்த பெயர் திருபாய். நாட்டு மக்களுக்குப் பெருமித உணர்வோ மகிழ்ச்சியோ ஏற்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

நேரு

காலத்தில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் விஷயத்தில் இந்திய அரசு எவ்வளவு துணிவுடனும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டது என்பதற்கு முதல் நிகழ்வு சரியான உதாரணம். நேருவின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதற்கு இரண்டாவது நிகழ்வே சாட்சி. நேருவின் கொள்கைகள் தெளிவாகவும் திட்டவட்டமானதாகவும் இருந்தன. எண்ணெய் வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போனால் பொருளாதார வளர்ச்சி தாராளமாக இருக்காது என தேசிய வளங்களுக்கான அப்போதைய அமைச்சர் கே.டி. மாளவியா அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிட்டன.

எண்ணெய்

மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் செலவுகள் அதிகமானதால், இந்தத் துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 1997-ம் ஆண்டில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, 1999-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 சுற்று ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சர்ச்சைக்குக் காரணமான கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை எரிவாயுவும் இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்பட்டதுதான்.

கிருஷ்ணா

-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவுக்கும் எண்ணெய்க்கும் பல தரப்பிலிருந்தும் இப்போது உரிமை கோரப்படுகிறது. இங்கு கிடைக்கும் எரிவாயுவில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தனியார் நலனுக்காக நாட்டு நலனை அடகு வைத்துவிடக்கூடாது என்கிறார் அவர். பொதுமக்களும் ஊடகங்களும் ஆதரிப்பதால் இந்தக் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.

அதேபோல்

, காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு எரிவாயுக் குழாய் அமைப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். மும்பை, குஜராத், உத்தரப் பிரதேசம் என வடக்குப் பக்கமே அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எல்லாவற்றுக்கும்

மேலாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கிறது. அம்பானி குடும்பத்துக்குள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் ஒரு பகுதி அனில் அம்பானியின் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த

எரிவாயு சப்ளைக்கு மற்றவர்களுக்குத் தருவதைவிட குறைந்த விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். இதை எதிர்த்து இந்திய அரசு இப்போது வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

கொஞ்சம்

சிந்தித்துப் பார்த்தால், விடை கிடைக்காத பல கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய தேசிய வளத்தை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கறாராக அமல்படுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

தேசிய

முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளத்தை, தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இது

தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகப் பெற முடியாத நிலையும் இருப்பதாகத் தெரிகிறது.

கிருஷ்ணா

-கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் முன்னாள் ..எஸ். அதிகாரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். கடுமையாக முயன்றும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தச்

சூழலில், அம்பானி சகோதரர்களின் சண்டை வீதிக்கு வந்திருக்கிறது. இந்தச் சண்டையில், முதலீட்டை அதிகரித்துக் காட்டுவது, விலையைக் குறைத்து நிர்ணயிப்பது, குறைந்த உற்பத்தி போன்ற தந்திரங்கள் கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தில் கையாளப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்தக்

குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

அத்துடன்

, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் தற்போதைய கொள்கைகளையும் சட்டங்களையும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

புதிதாக

வகுக்கப்படும் கொள்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், திட்டங்களைச் செயல்படுத்தும்போது இடம்பெயரும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்வதாகவும் அமைய வேண்டும். இதைச் செய்யும் வரையில் அம்பானிகள் விவகாரத்தால் எழுந்திருக்கும் சர்ச்சை

ஓயப்போவதில்லை