இப்போது தென் மாநிலங்களிலும் தன் கோரமுகத்தை நீட்டியுள்ளது வறட்சி. முக்கியமாக ஆந்திரத்தில் உச்சகட்டம் என்றே சொல்லலாம். கடந்த ஒரு வாரத்தில் இங்கு ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.
ஆந்திரா முழுவதும் நல்ல சாப்பாட்டு அரிசியின் கிலோ ரூ.50க்கும் மேல். சர்க்கரை விலையைக் கேட்டால் வாழ்க்கையே கசந்து விடும். கிலோ ரூ.38 வரை உயர்த்தப்பட்டுள்ளதாம். துவரம் பருப்பு ரூ.130 வரை விற்கப்படுகிறது.
தமிழகம் மட்டும் விதிவிலக்காகிவிடுமா... இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சர்க்கரை விலை கிலோ 33 முதல் 35 வரை இஷ்டத்துக்கும் விலை வைத்து விற்கிறார்கள் (கிராமப்புற ரேஷன் கடைகளில் ரூ.13 மட்டும்தான், ஆனால் அதைப் பெற மைல் நீள க்யூவில் நிற்கவேண்டும்!).
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 சதவிகித விலை உயர்வு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு அத்தியாவசிய பொருளுக்கும் என்கிறது நேற்று வெளியான ஒரு விலை ஆய்வு முடிவு.
வருகிற நாட்கள் மிகக் கொடுமையாக இருக்கும் என்றும் சர்க்கரை விலை ரூ.50-ஐ எட்டிவிடும் என்றும், துவரம்பருப்பு ரூ.200 வரை கூட போகலாம் என்றும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம், 'அரசு சொல்வதைப் போல வர்த்தகர்களுக்கு அத்தியாவசிய பொருள் கொள்முதல் என்பது தாராளமாக இல்லை. இதனால் நாங்கள் மிகப் பெரும் விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது', என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் தென் மாநிலங்களில் விளைச்சல் நிலங்கள் நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்துவிட்டன. சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு விவசாயமே இல்லை என்ற நிலை. கிராமப்புறங்களில் நிலத்தின் விலையை ஏற்றிவிட்ட புரோக்கர்கள், விவசாயிகளை உழைக்கும் மனநிலையிலிருந்து கிட்டத்தட்ட விரட்டி விட்டார்கள்.
அரசும் தொழிற்சாலைகளுக்கு பெருமளவு நிலங்களை எடுத்துக் கொடுத்து வருகிறது. முக்கியமாக சின்னச் சின்ன ஏரிகளை அரசே தரைமட்டமாக்கி தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஆக, வரும் நாட்கள் பெரும் சோதனைக் காலமாக அமையும் என்பதே உண்மை. நமக்கு நாமே நல்ல விதமாக நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பதைத்தவிர வேறு வழியில்லை!
No comments:
Post a Comment